த.வி.வெங்கடேஸ்வரன் முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரச்சார், இந்திய அரசு
கொரோனா தொற்று ஆறு லட்சத்தை தாண்டிக்கொண்டிருக்கும் வேளையில் எதிர்பாராத ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் (COVAXIN) என்ற தடுப்பூசியை கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருப்பது ஒரு ஆறு தலான செய்திதான். இக்கட்டுரை வெளியாகும் சமயம், ரஷ்யாவும் தடுப்பூசி கண்டு பிடித்துவிட்டதாக செய்தி வந்துள்ளது. இந்திய மருத்துவ ஆய்வுக்கழகத்தின் தலைமை இயக்குனர், தடுப்பூசிக்கான மருத்துவமனைப் பரிசோதனைகளை விரைவுபடுத்துமாறு எழுதிய கடிதம் பரவலாக வெளியிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி என்றால் என்ன?
தடுப்பூசி (Vaccine) என்பது ஒரு செயலிழக்கப்பட்ட நுண்கிருமி. இது எவ்வாறு வேலை செய்கிறது? இதை எவ்வாறு தயாரிக்கிறார்கள்? தயாரிப்பு எந்த நிலையில் உள்ளது? இதை முழுமையாக தயாரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு எத்தனை காலம் ஆகும்?
எளிமையாக சொல்ல வேண்டுமானால் கிருமிகள் நம்மை தாக்கும்போது அதை அடையாளம் கண்டு அதை எதிர்க்கும் எதிர்ப்பொருட்களையும்(Antibodies) அதை அழிக்கும் டி-செல்களையும் (T-cells) நமது நோய் எதிர்ப்பு மண்டலம் உண்டாக்க வேண்டும்.அதற்கு பயிற்சி அளிக்கும் ஒரு தூண்டு பொருளே தடுப்பூசி என்பது.
ஆன்டிஜென்களும் ஆன்டிபாடிகளும்
நோய்க் கிருமிகள், குறிப்பிட்ட மூலக்கூறுகளைக் கொண்ட ஆன்டிஜென்ஸ்(Antigens) எனப்படும் உடல்பகுதி களைக் கொண்டிருக்கின்றன. இவை நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை எதிர்வினையாற்ற தூண்டுகின்றன. நோய் பரப்பும் நுண்கிருமிகள் நமது உடலை தாக்கும்போது அவற்றிற்கு எதிராக நமது நோய் எதிர்ப்பு மண்டலம் ஆன்டிபாடிஸ் (Antibodies) எனும் எதிர்ப் பொருட்களை உண்டாக்குகின்றன. இவற்றின் உள்கட்டமைப்பு, நுண்கிரு மியின் தொற்றை அழித்து அவை மேலும் பரவாமல் தடுக்கின்றது. இது T வடிவத்தில் உள்ளது. நமது செல்லைப் பற்றியிருக்கும் மரையாக நுண்கிருமியை கற்பனை செய்தால், அதைக் கழற்றுவதற்கான ஸ்பானராக ஆன்டி பாடியை நினைக்கலாம். போல்ட்டிலிருந்து நட்டைக் கழற்ற வேண்டுமென்றால் சரியான அளவு ஸ்பானராகவும் அதை இறுக்கமாகப் பற்றியிருப்பதாகவும் இருக்க வேண்டும்.
பெரும்பாலான மரைகள் அறுகோண வடிவுடையது. ஆனாலும் மூடி, தொட்டி, கூண்டு மற்றும் இறக்கை வடிவ மரைகளும் உள்ளன. அவை வெவ்வேறு அளவுகளிலும் வருகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் பொருந்துகின்ற ஸ்பானர்களும் இருக்கின்றன. அவற்றை வைத்துதான் அந்தந்த மரைகளை கழற்ற முடியும். அதைப்போல ஆன்டி ஜென்களுடன் பொருந்துகின்ற ஆன்டிபாடிகளைக் கொண்டுதான் நுண்கிருமிகளை செயலிழக்க செய்ய முடியும்.வீட்டிலிருக்கும் நம்மிடம் ஓரிரு வகை ஸ்பானர்கள் தான் இருக்கும். ஆனால் ஒரு கார் மெக்கானிக்கிடம் நூற்றுக் கணக்கான வகைகள் இருக்கும். நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தின் எதிர்ப்பொருள் களஞ்சியத்தில் ஆயிரம் கோடி வெவ்வேறு மூலக்கூறுகளுடனே நாம் பிறக்கிறோம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் பல நேரங்களில், உடலில் புகும் புதிய நுண்கிருமிகளுக்கு ஏற்க னவே வடிவமைக்கப்பட்ட ஆன்டிபாடிகள் பொருந்துவ தில்லை. குறிப்பாக புதிதாகப் பரிமாண வளர்ச்சி பெற்றுள்ள அடைந்த நாவல் கொரோனா (கோவிட் - 19) போன்ற நுண்கிருமிகளை அவற்றால் அகற்ற முடிவதில்லை.
பொருத்தமான ஜோடிகள்
சரியான ஸ்பானர் கிடைக்கவில்லையென்றால் மெக்கா னிக் முயற்சியைக் கை விடுவதில்லை. ஸ்பானரில் நூலை சுற்றி மரையை இறுகப் பற்ற வைக்கிறார். அதைப்போல புதிய நுண்கிருமி வரும்போது ஏற்கனவே உள்ள கோடிக் கணக்கான ஆன்டிபாடிகளில் ஓரளவுக்கு பொருத்தமா னவை அவற்றை அழிக்க முயற்சி செய்யும். ஆனால் ஸ்பானரைப் போல இல்லாமல் எதிர்ப்பொருட்கள் உயிர்ப் பொருட்கள் என்பதால் அவற்றால் புதிதாகப் பரிணமிக்க முடியும். T வடிவமான ஆன்டிபாடியின் கீழ்த்தண்டு மாறா மல் இருக்கின்றது. கவண் போல் பிரிந்திருக்கும் இரண்டு கைகளில் ஒன்றின் நுனி தகவமைத்துக்கொண்டு வளர்ச்சி அடையும். பல சுற்று வளர்ச்சிக்குப் பிறகு ஆன்டி பாடி முதிர்ச்சி பெற்று ஆன்டிஜென்னுடன் சரியாகப் பிணைத்துக் கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட நுண்கிருமியை அகற்றும் தன்மை கொண்ட ஆன்டிபாடிகள் வேறு வகைப்பட்ட நுண் கிருமிகளுக்கு எதிராக செயல்பட முடிவதில்லை.
மறக்கவே மறக்காது
ஆன்டிபாடி உருவாக்கம் என்பது ‘சோலியை முடிச்ச’ பிறகு அதை மறந்துவிடுவது அல்ல.பெரும்பாலான கணினிகள் டார்க்ஸ் திருகாணியுடன் வருகின்றன. அவற்றை திறப்பதற்கு டார்க்ஸ் திறப்பான் வேண்டும். திறந்தபின் அந்த திறப்பானை தூக்கிப் போடுவதில்லை. எதிர்காலத்தில் தேவைப்படும் என்று அதை ஒரு டூல்பாக் ஸில் போட்டு வைத்திருப்போம். அதைப்போல நோய் எதிர்ப்பு மண்டலம் ஒரு குறிப்பிட்ட நுண்கிருமிக்கெதிராக ஒரு ஆன்டிபாடியை உருவாக்கியபின் அதை மறப்பதில்லை. அந்த ஆன்டிஜென்னும் ஆன்டிபாடியும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பி செல் மற்றும் டி செல்லின் நினை வடுக்குகளில் எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கப் பட்டிருக்கும்.அந்தக் குறிப்பிட்ட நுண்கிருமி மீண்டும் தாக்கும்போது உடனே அதற்கேற்ற ஆன்டிபாடியை தக வமைத்து உருவாக்கும். நினைவடுக்குகள் உலுக்கப்பட்டு பொருத்தமான ஆன்டிபாடிகள் வெள்ளம்போல் பாயும். இந்த மின்னல்வேக தாக்குதலில் நுண்கிருமி பிழைக்க சாத்தியமேயிருக்காது. அதனால்தான் அம்மை போன்ற பெரும்பாலான நுண்கிருமி நோய்கள் இரண்டாவது முறை வருவதில்லை. அந்தக் கிருமிக்கு எதிர்ப்பு சக்தியை பெற்று விடுகிறோம்.
புதிய கொரோனா வைரஸ் எளிய அமைப்பைக் கொண்டது. அதன் உயிர்ப் பொருளான சிறிய ஆர்என்ஏ (RNA) துணுக்கு, கருவின் N புரதத்தை சுற்றி பொதிந்துள் ளது. இதன் மேல், உறை, கொம்பு, படலம் என மூன்றடுக்கு புரதங்கள் உள்ளன. கொம்புப் புரதம் எஸ்1 மற்றும் எஸ்2 ஆகிய இரு பகுதிகளைக் கொண்டது. எஸ்1இன் ஒரு பகுதி நம் செல்களிலுள்ள ஏற்பிகளுடன்(RECEPTORS) பிணைத்து தொற்றை ஏற்படுத்துகிறது. எஸ்1, எஸ்2, கருப் புரதம் மூன்றுமே ஆன்டிஜென் வேலையை செய்கின்றன. நமது நோய் எதிர்ப்பு மண்டலம் இந்த மூன்றிற்கும் எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன.
இழுபறி போராட்டம்
ஆன்டிபாடி வளர்ச்சியடைவதற்கு முன், புதிய கொரோ னா வைரஸின் கை ஓங்கியிருக்கும். எந்த தடையுமில்லா மல் பரவி நமது நுரையீரல்களை சீரழிக்கும். அது ரத்தக் குழாய்களை துளைத்துக் கொண்டு ரத்த ஓட்டம், இதயம், மூளை என எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அதை நீக்கும் ஆன்டிபாடி உருவாக்கப்பட்ட பின், நுண் கிருமிக்கும் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் இழுபறி நடக்கிறது.வயதானவர்களாக இருந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் மெதுவாக இயங்கும். பொருளாதார ரீதியாக ஏழ்மையில் இருந்து ஊட்டக் குறைபாடு இருந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும்; அல்லது ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை இருந்தால், இந்த நிலைமைகளில் நுண்கிருமி காட்டுத் தீ போல் பரவும். நுரையீரல், ரத்தக் குழாய்கள் ஆகியவை சிதைக்கப்பட்டிருக் கும். நோய் எதிர்ப்பு மண்டலம் ஆன்டிபாடிகளை தூண்டி இயக்குவதற்கு முன்பே சில திசுக்கள் ஆக்சிஜன் இல்லாமல் இறந்துவிடும். இப்பொழுது இழுபறியில் சமநிலை முறியும் தருவாயில் இருக்கும். பலர் பிழைத்துக் கொள்வார்கள்; சிலர் இறந்துவிடுவார்கள்.
இதற்கு மாறாக நீங்கள் இளம் வயதுக்காரராக, நல்ல ஊட்ட சத்து உடையவராக, தொற்றுடன் கூடுதல் நோய்கள் எதுவும் இல்லாதவராக இருந்தால் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்படும். நீங்கள் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்று தப்பித்துக் கொள்வீர்கள். இதற்கிடையில் நீங்கள் முகக்கவசம் அணிதல்,கை கழுவுதல், தனிமனித இடைவெளி ஆகிய கொரோனா முன் எச்சரிக்கைகளை கடைப் பிடிக்காவிட்டால் நுண்கிருமிகளை மற்றவர்களுக்கு அளித்திருப்பீர்கள். இறுதியாகப் பார்த்தால் வாழ்வும் சாவும் நமது நோய்தடை அமைப்பு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பொறுத்தே.
நோய் தடுப்பு அமைப்பை பழக்குவது எப்படி?
மோப்ப நாய்க்கு ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க அவனது ஆடையிலிருந்து வாசனையை முகர்ந்துவிட்டால் போதும். அவன் சென்ற பாதையில் நம்மை அது அழைத்துச் செல்லும். அதைப்போல தொற்று ஏற்படுவதற்கு முன்பே ஒரு நுண்கிருமியை அடையாளம் காண நமது நோய் தடை அமைப்பைப் பழக்க முடியும். அதுதான் தடுப்பூசி.
பள்ளி சோதனைச் சாலைகள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றில் பாம்பு, தவளை போன்றவை கண்ணாடி ஜாடிக்குள் பார்மால்டிஹைடு (Formaldehyde) எனும் வேதிப்பொருளால் பதப்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்தி ருப்போம். அவை இறந்துவிட்டன;ஆனால் அவற்றின் உடல் சிதைவடையவில்லை. அதைப்போல நுண்கிருமி களையும் பார்மால்டிஹைடு மூலம் செயலிழக்கச் செய்ய லாம். வெப்பத்தின் மூலமும் செய்யலாம். வைரஸ் ‘இறந்து விட்டது’;ஆனால் அதன் உடல் பாகங்கள் அப்படியே இருக்கின்றன. செயலிழந்த கிருமியால் தன்னைப் பெருக்கிக் கொள்ளவோ அல்லது நோய் ஏற்படுத்தவோ இயலாது. நுண்கிருமி உயிர் வாழ்வதுமில்லை;இறப்பதுமில்லை. ஆகவே அதை அழிப்பது என்று சொல்ல முடியாது; அதை செயலிழக்க செய்வது என்றுதான் சொல்ல முடியும்.
நமது நோய் தடுப்பு அமைப்பை தூண்டுவதற்கு நுண்கிருமி உயிரோடிருக்க வேண்டியதில்லை. நுண்கிருமி யின் மேற்பரப்பிலுள்ள ஆன்டிஜென்கள் போதுமானது. அதை அடையாளம் கண்டவுடன் நமது அமைப்பு பைத்தியம் பிடித்ததுபோல் வேலை செய்ய தொடங்குகிறது. இதற்கு முன் வராத ஒரு கிருமி தாக்குவதாக நினைத்துக் கொண்டு தனது வேலையை தொடங்குகிறது. அதாவது அதை நாம் ஏமாற்றிவிடுகிறோம். எதிர்வினை முடுக்கி விடப்பட்டு அந்த ஆண்டிஜென்னுக்கு பொருத்தமான ஆண்டிபாடிகளை உருவாக்குகிறது. அதை நினைவிலும் வைத்துக் கொள்கிறது. இப்பொழுது நாம் தூண்டப்பட்ட நோய் தடுப்பை பெற்றுவிட்டோம். இனி அந்தக் கிருமி நம்மைத் தொற்ற முடியாது.
தடுப்பூசி உருவாக்கத்தின் பாதை
செயலிழக்கப்பட்ட கிருமியை உருவாக்குவதற்கு முதலில் அதை செல்களில் வளர்க்கவேண்டும். பிறகு அதை செயலிழக்க செய்ய வேண்டும். சமயங்களில் கிருமியின் சிதைக்கப்படாத புரதம் நச்சுத்தன்மையுடன் இருக்கும். ஆகவே செயலிழக்கப்பட்ட கிருமி உடலில் செலுத்துவதற்கு பாதுகாப்பானது தானா? என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் செயலிழக்க செய்யும்போது கிருமியின் ஆன்டி ஜென்கள், கட்டமைப்பை சிதைத்துவிட்டால் என்ன செய்வது? அப்போது பொருத்தமான ஆன்டிபாடிகள் உரு வாகாது. ஆகவே விலங்குகளில் அதைப் பரிசோதிப்பதற்கு முன் ஒரு சோதனைக் கூடத்தில் அதன் திறனை சோதித்துப் பார்க்க வேண்டும். இந்திய மருத்துவ ஆய்வுக்கழகத்தை சேர்ந்த பூனேயிலுள்ள தேசிய கிருமியியல் நிறுவனம் (National Institute of Virology) ஒரு இந்திய நோயாளியி டமிருந்து இந்தக் கிருமியைப் பிரித்தெடுத்து சோதனைக் கூடத்தில் வெற்றிகரமாக வளர்த்துள்ளது. இது ஒரு முக்கியமான முன்னெடுப்பு.
சோதனைக் கூடத்தில் கொரோனா கிருமியை வளர்ப்ப தென்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நாவல் கொரோனா வைரஸ் ஒரு தளுக்கான பேர்வழி. மனித செல்க ளில் சிலவற்றில் மட்டும்தான் இந்த வைரசால் தொற்றை ஏற்படுத்த முடியும். நமது மூச்சுக் குழாயின் உட்பக்க தளமாக உள்ள எபிதீலியல் செல்களில் இவை தொற்றிக்கொள்கின் றன. அதனால்தான் நமது மூக்கு,வாய்,கண் ஆகியவற் றின் வழியே நமக்கு தொற்று ஏற்படுகிறது. எபிதீலியல் செல்களில் ‘ACE2’ எனும் ஏற்பிகள் அதிகமாக உள்ளன. கொரோனா வைரஸ் இந்த ஏற்பிகளைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிடுகின்றன. நமது தோல் செல்களில் இந்த ஏற்பிகள் இல்லை.எனவே சுத்தமான கைகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது. சோதனைக் கூடங்க ளில்கொரோனா வைரஸ்,மனித மூச்சுகுழாயின் எபிதீலி யல் செல்களில் அல்லது ஆப்பிரிக்க பச்சைக் குரங்கின் சிறுநீரக எபிதீலியல் செல்களில் வளர்க்கப்படுகின்றன.
அடுத்த சவால், செயலிழக்கப்பட்ட கிருமியின் திறனை யும் பாதுகாப்புத் தன்மையையும் விலங்குகளில் பரிசோ தித்துப் பார்ப்பது. பிரச்சனை என்னவென்றால் நாவல் கொரோனா வைரஸ் மனிதர்களை தொற்றுவதைத்தான் விரும்புகின்றன; எடுத்துக்காட்டாக எலிகளில் தொற்ற முடிவ தில்லை. ஏனெனில் எலிகளில் ‘ACE2’ ஏற்பிகள் இல்லை. மூச்சுக்குழாய் எபிதீலியல் செல்களில் ‘ACE2’ ஏற்பிகள் உள்ள மரபணு மாற்றப்பட்ட எலிகள் உண்டாக்கப்பட்டன. இப்பொழுது இந்த சோதனை எலிகளும் மனிதர்களைப் போல கொரோனா வைரசால் தொற்றக்கூடியதாகிவிட்டன. தடுப்பூசியின் திறனும் பாதுகாப்புத் தன்மையும் முதலில் இந்த சோதனை எலிகளிடம் பரிசோதித்துப் பார்க்கப்படும். பிரீ கிளினிக்கல் சோதனைகள் என்றழைக்கப்படும் முந் தைய கட்டத்தில் இவையெல்லாம் முக்கியமான படிநிலை கள். இதற்குப் பிறகுதான் மனிதர்களிடம் சோதனை நடத்தப்படும்.
அடுத்த கட்டம் என்ன?
கொவேக்சின் தடுப்பூசி, கிளினிக்கல் சோதனையின் முதல் கட்டத்தில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த சோதனைகளை விரைவுபடுத்துமாறு பன்னிரண்டு கொரோ னா மருத்துவமனைகளை ஐசிஎம்ஆர் பணித்துள்ளது. அதாவது விலங்குகள் சோதனை உட்பட பிரீ கிளினிக்கல் சோதனைகள் முடிந்துவிட்டன என்று பொருள். ஆனால் இது குறித்த விவரங்கள் பொதுப் பார்வையில் வைக்கப்பட வில்லை.
மனித சோதனையின் முதல் கட்டத்தில் தடுப்பூசியின் பாதுகாப்பை சோதிப்பதற்காக ஒரு ஆரோக்கியமான மனி தப் பிரிவினருக்கு தடுப்பூசி போடப்படும். அவர்களுடைய முக்கிய உறுப்புகள், மாற்றங்கள் கண்காணிக்கப்படும். ரத்த மாதிரிகள் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்படும். முதல் கட்ட சோதனையில் தடுப்பூசி, பயன்படுத்துவதற்கு பாதுகாப்பா னதா என்றும் நோய் தடுப்பு எதிர் வினை தூண்டப்படு கிறதா என்பதும் தெரியவரும். அதாவது தடுப்பூசி, நாவல் கொரோனா வைரசுக்கெதிராக நோய் தடுப்பை செயற்கை யாக தூண்டுகிறதா என்பது தெரியும்.முதல் கட்ட சோதனை வெற்றிகரமானால், நோய் அபாயம் உள்ளவர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கான மக்கள் பங்கெடுக்கும் இரண்டாம் கட்ட சோதனைகள் தொடங்கப்பட வேண்டும். இந்த சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பாதிப் பேருக்கு சோதனை தடுப்பூசி போடப்படும். மற்றொரு பாதி மக்களுக்கு மருந்தற்ற ஊசி(placebo) போடப்படும். இத்த கைய வகைப்படுத்தப்படாத மறைக்கப்பட்ட சோதனையில் (Randomised,double- blind trial) இரண்டு பிரிவினரை யும் கண்காணித்து எத்தனை பேருக்கு நோய் தொற்று ஏற்படுகிறது என்பதைக் கண்டு தடுப்பூசியின் திறன் மதிப்பீடு செய்யப்படும்.
இந்த சோதனையின் தொடர் கண்காணிப்பு 14ஆவது நாள், 28ஆவது நாள், 104ஆவது நாள், 194ஆவது நாள் ஆகிய இடைவெளிகளில் கண்காணிக்கப்படும் என்று இந்திய கிளினிக்கல் சோதனை ஆவணத்தின் மக்கள் தொடர்பு பிரிவு தெரிவிக்கிறது. அதாவது ஆறுமாதங்கள் ஆகும். பாரத் பயோடெக் நிறுவனத்தின் அறிக்கையின்படி மொத்த சோதனை முயற்சியும் முடிய ஒரு வருடம் மூன்று மாதங்கள் ஆகும்.இந்த இரண்டு கட்ட சோதனைக்குப் பின் பாதிக்கப்ப டக்கூடிய மக்கள் பிரிவினரையும் உள்ளடக்கிய மேலும் கணிசமான எண்ணிக்கையில் பங்கேற்போர் கொண்ட மூன்றாம் கட்ட சோதனைகள் நடப்பது வழக்கம். இந்த சோத னையும் வெற்றியானால் அந்த நிறுவனத்திற்கு தடுப்பூசி தயாரிக்கவும் விற்கவும் உரிமம் தரப்படும். இருந்த போதி லும் தடுப்பூசி போடப்பட்டவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களை பெருமளவு கண்காணிப்பது தொடரும். தடுப்பூசி யின் நீண்ட கால பக்க விளைவுகளை அறிவதற்காக நான்காம் நிலை சோதனை என்றழைக்கப்படும் இது, பல வருடங்கள் தொடர்ந்து நடத்தப்படும்.
04.7.2020 தேதியிட்ட ‘தி பெடரல்’ இதழ்
கட்டுரையின் தமிழாக்கம் ஆர்.ரமணன்